படங்களின் ரிலீசில் வரைமுறை தேவை – உதயா வேண்டுகோள்

சென்னை,
‘திருநெல்வேலி’, ‘கலகலப்பு’, ‘தலைவா’ போன்ற படங்களில் நடித்துள்ள உதயா ‘அக்யூஸ்ட்’ என்ற படத்தை நடித்து, தயாரித்துள்ளார். பிரபு ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் கடந்த 1-ந்தேதி வெளியானது.
தற்போது தமிழகம் முழுவதும் சென்று பட விழாக்களில் பங்கேற்று வரும் உதயா, சமீபத்தில் பேசிய விஷயங்கள் வைரலாகி இருக்கிறது. உதயா பேசும்போது, சினிமாவில் தொடர்ந்து அவமானங்களையும், தோல்விகளையுமேயே நிறைய சந்தித்துள்ளேன். இனி இழப்பதற்கு எதுவுமே இல்லை என்ற சூழலில், ‘அக்யூஸ்ட்’ படத்தை தயாரித்து, நடித்தேன். படத்தின் வெற்றி எனக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது. தற்போது திரையரங்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
ஒவ்வொரு வாரமும் 10-க்கும் மேற்பட்ட படங்கள் வருகின்றன. படங்கள் ரிலீசில் ஒரு வரைமுறை தேவை. அப்போது தான் எல்லா படங்களும் ஓடும். இதற்கு சம்பந்தப்பட்ட திரைப்பட அமைப்பினர் நடவடிக்கை எடுத்தால் நல்லது”, என்றார்.