நிலாவையே தருவதாக சொன்னாலும் பிக்பாசில் பங்கேற்க மாட்டேன்- பிரபல நடிகை | Even if they offer me the moon, I won’t participate in Bigg Boss

சென்னை,
சின்னத் திரையில் ஒளிபரப்பாகி வரும் பிரபல நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிகழ்ச்சிக்கு பார்வையாளர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 9 விரைவில் தொடங்க இருக்கிறது. மக்களிடையே வரவேற்பு பெற்ற இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு பலர் போட்டி போட்டு வருகின்றனர். ஆனால் நடிகை தனுஸ்ரீ தத்தா பிக்பாஸ் வாய்ப்பை நிராகரித்துள்ளார்.
விஷால் நடித்த தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமான தனுஸ்ரீ தத்தா இது குறித்து அளித்த பேட்டியில், ‘கடந்த 11 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்னை அழைக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் அவர்களை திட்டி விடுவேன். நிகழ்ச்சியில் பங்கேற்க ரூ.1.65 கோடி தருவதாக சொன்னார்கள். ஆனால் நான் மறுத்து விட்டேன்.
நிலாவையே தருவதாக சொன்னாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன். ஆண்களும், பெண்களும் ஒரு படுக்கையில் படுத்து, சண்டைப் போட்டுக் கொண்டு இருக்க என்னால் முடியாது. ஒரு ரியாலிட்டி ஷோவுக்காக ஒரு ஆணுடன் ஒரே படுக்கையில் படுக்கும் சீப்பான பெண் நான் அல்ல’ என்றார். பிக்பாஸ் தமிழ் சீசன் 9 அக்டோபர் 5-ந்தேதி தொடங்க இருக்கிறது.