நா.முத்துக்குமாரின் 50-வது பிறந்தநாள் – இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

சென்னை,
மறைந்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார், சுமார் ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல கவிஞராக வலம் வந்த நா.முத்துக்குமார். காஞ்சிபுரம் மாவட்டம் கன்னிகாபுரத்தில் 1975 ம் ஆண்டு பிறந்தார். ஆரம்பத்தில் இயக்குனராக பணியாற்ற விரும்பிய நா.முத்துக்குமார் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் 4 ஆண்டுகள் பணியாற்றினார். சீமான் இயக்கத்தில் வெளிவந்த ‘வீரநடை’ படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார்.அதன்பிறகு, பாடல்கள் எழுவதில் ஆர்வம் ஏற்பட்டு, இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு, முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்ற ஆனந்த யாழை மீட்டுகிறாய், சைவம் படத்தில் இடம்பெற்ற அழகே அழகே ஆகிய பாடல்களுக்காக தொடர்ந்து இரண்டு முறை தேசிய விருது வென்றிருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியராக இருந்த அவர், உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த 2016-ம் ஆண்டு தனது 41-வது வயதில் உயிரிழந்தார்.
இந்நிலையில் அவரது 50வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக, ஜுலை 5-ம் தேதி, சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், இசை நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கிறது. இதில் அவர் பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்களும் பின்னணி பாடகர்களும் பங்கேற்கின்றனர். வெல்பர் கோர் கமிட்டியுடன் இணைந்து ஏசிடிசி நிறுவனம் இந்த இசை நிகழ்ச்சியை நடத்துகிறது.
இதுதொடர்பாக வெளியான அறிக்கையில், “தமிழ் சினிமா பாடல்களை தனது எழுத்துக்களால் இலக்கியமாக்கிய பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் 50வது பிறந்தநாளில், அவர் தமிழ் இலக்கியத்திற்கும், தமிழ் திரையிசைப் பாடல்களுக்கும் ஆற்றிய இணையற்ற பங்களிப்புகளை கொண்டாடும் விதமாக நடக்கவிருக்கும் மாபெரும் இசை நிகழ்ச்சியை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.தனது எழுத்தால் ஒரு தலைமுறைக்கே காதலையும் ஆறுதல்களையும், நம்பிக்கைகளையும் கொடுத்துக் கொண்டிருக்கும், அழியா புகழ் கொண்ட இந்த மாபெரும் கவிஞனுக்கு மரியாதை செய்யும் விதமாக, நா.முத்துக்குமாரின் பாடல்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர்களும் பின்னணி பாடகர்களும் பங்கேற்கும் ஒரு பிரமாண்டமான இசை நிகழ்ச்சியாக இது அமைய இருக்கிறது. வீசும் காற்று முழுக்க தன் கவிதைகளை பாடல்களாக கலந்திட வைத்திருக்கும் இந்த கலைஞனோடு தங்களுக்கு ஏற்பட்ட மறக்கமுடியாத நிகழ்வுகளையும் பணியாற்றிய நினைவுகளையும் ரசிகர்களிடம் பகிர நா.முத்துக்குமாரோடு பணியாற்றிய திரை பிரபலங்களும் நண்பர்களும் பங்கேற்க இருக்கிறார்கள். திரையிசைப் பாடல்களில் தனக்கென தனி முத்திரையை பதித்ததோடு, கோடானு கோடி ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காது நிறைந்திருக்கும் பாடலாசிரியர் நா. முத்துக்குமாரின் 50வது பிறந்தநாள் விழாவை, வரும் ஜூலை 5ம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியாக நடத்த ஏசிடிசி நிறுவனம் பெருமைக் கொள்கிறது” என தெரிவித்துள்ளது.
இந்த கச்சேரி மூலம் கிடைக்கும் பணத்தில் நா.முத்துக்குமாரின் குடும்பத்திற்கு நிதியுதவி செய்ய இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.