நாளை பேரனின் காதணி விழா: ரோபோ சங்கரின் நிறைவேறாத ஆசை

சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ரோபோ சங்கர். கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ரோபோ சங்கர் நேற்று இரவு காலமானார். அவரது மறைவு ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
ரோபோ சங்கர் – பிரியங்கா தம்பதிக்கு இந்திரஜா என்ற மகள் உள்ளார். இவரும் பெற்றோரைப்போல சினிமாவில் நடித்து வருகிறார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. நட்சத்திரன் என்ற பெயரில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்த குழந்தையின் காதணி விழா நாளை (சனிக்கிழமை) மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மானுத்து கிராமத்தில் உள்ள பெத்தன சுவாமி கோவிலில் நடைபெற இருந்தது. பேரனின் காதணி விழாவுக்கு அழைப்பிதழ் அச்சிட்டு, உற்றார்-உறவினர்கள், நண்பர்களுக்கு ரோபோ சங்கரும் கொடுத்துவந்தார். விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டன. ஆனால், பேரனின் காதணி விழாவுக்கு முன்பே உடல்நலக் குறைவால் ரோபோ சங்கர் இறந்து போனது, அனைவரது மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆசையும் நிராசை ஆனது. விழாக்கோலம் பூண வேண்டிய வீட்டில் சோக மேகம் சூழ்ந்தது.