நடிகை ராதிகாவுக்கு டெங்கு – மருத்துவமனையில் அனுமதி|Actress Radhika admitted to hospital with dengue

சென்னை,
நடிகை ராதிகா டெங்கு காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னும் 5 நாட்கள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
இயக்குனர் பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயில்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக ராதிகா அறிமுகம் ஆனார். தனது தனித்துவமான நடிப்பு திறமை மூலம் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார். இதுவரை நந்தி விருதுகள், பிலிம்வேர் விருதுகள் உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளை பெற்றுள்ளார்.
தமிழை போலவே தெலுங்கிலும் பிரபலமான நடிகையாக வலம் வந்த ராதிகா, சின்னத்திரையில் ‘சித்தி’, ‘அண்ணாமலை’, ‘வாணி ராணி’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். இப்படி பல பெருமைகள் ராதிகாவிற்கு இருக்கிறது. இந்நிலையில், நடிகை ராதிகா 2 நாட்களுக்கு முன் டெங்கு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை நடந்து வருகிறது. இன்னும் 5 நாட்களில் அவர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.