நடிகை ரம்யா குறித்து ஆபாச கருத்து: நடிகர் தர்ஷனின் ரசிகர் கைது

பெங்களூரு,
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷனின் ஜாமீன் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம் (ஜூலை) நடைபெற்றது. அப்போது தர்ஷனுக்கு எதிராக நடிகை ரம்யா கருத்து வெளியிட்டு இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த தர்ஷனின் ரசிகர்கள், நடிகை ரம்யாவை ஆபாசமாக பேசியும், அவருக்கு எதிராக அவதூறாக கருத்து தெரிவித்தும் பதிவு வெளியிட்டனர்.
இதுபற்றி கடந்த மாதம் 28-ந்தேதி பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங்கிடம் நடிகை ரம்யா புகார் அளித்திருந்தார். இதையடுத்து, மத்திய மண்டல சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் 48 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ரம்யா பற்றி ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்து வெளியிட்டு இருந்த விஜயாப்புரா மாவட்டத்தை சேர்ந்த சந்தோஷ் (வயது 21) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டிட வேலை செய்து வரும் இவர், நடிகர் தர்ஷனின் ரசிகர் என்று கூறப்படுகிறது. விஜயாப்புராவில் இருந்து சந்தோசை பெங்களூருவுக்கு அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன்மூலம் இந்த வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.