நடிகை ரம்யாவுக்கு எதிராக ஆபாச புகைப்படம் வெளியிட்ட வாலிபர் கைது

பெங்களூரு,
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷனுக்கு எதிராக நடிகை ரம்யா கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு எதிராக நடிகை ரம்யா குறித்து சமூக வலைதளங்களில் நடிகர் தர்ஷனின் ரசிகர்கள் அவதூறாக கருத்துகளை வெளியிட்டனர். இதுபற்றி பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங்கிடம் நடிகை ரம்யா புகார் அளித்தார்.
அதன்பேரில், பெங்களூரு மத்திய மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரம்யா குறித்து அவதூறு மற்றும் ஆபாசமாக கருத்துகளை வெளியிட்டதாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், நடிகை ரம்யா பற்றி அவதூறு கருத்து வெளியிட்டதாக கே.ஆர்.புரத்தை சேர்ந்த பிரமோத் கவுடா (வயது 20) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் கைதானவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. கைதான பிரமோத் கவுடா, ரம்யாவுக்கு எதிராக ஆபாச புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு இருந்ததுடன், அவரை மிரட்டும் விதமாக அவதூறு கருத்துகளையும் வெளியிட்டு இருந்தார்.
பிரமோத் கவுடா தனது நண்பரின் செல்போனை பயன்படுத்தி இந்த செயலை செய்திருந்தார். பிரமோத் கவுடா நடிகர் தர்ஷனின் ரசிகரா? என்பது பற்றி தெரிவிக்க போலீசார் மறுத்து விட்டனர். விசாரணைக்கு பின்பு அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.