நடிகை மீரா மிதுன் டெல்லியில் கைது

நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி, சமூக வலைதளத்தில், வீடியோ வெளியிட்டார். இது தொடர்பாக, பல்வேறு அமைப்புகள், அவர் மீது போலீசில் புகார் அளித்தன. இப்புகார் குறித்து விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏழு பிரிவுகளின் கீழ், மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், இருவரும் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணையின்போது, மீரா மிதுன் தொடர்ந்து ஆஜராகவில்லை. இதையடுத்து, மீரா மிதுனுக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத, ‘வாரன்ட்’ பிறப்பிக்கப்பட்டது.
பிடிவாரன்ட் உத்தரவு பிறப்பித்து, மூன்று ஆண்டுகளான நிலையில், தனிப்படை போலீசாரால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. ‘பிடிவாரன்ட்’ உத்தரவை நிறைவேற்றாத போலீசாரின் நடவடிக்கைக்கு, நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், நடிகை மீரா மிதும் டெல்லியில் இருப்பதாக தகவல் கிடைத்த நிலையில், டெல்லி போலீசார் உதவியுடன், டெல்லி சட்டப் பணிகள் ஆணைக் குழுவால், மீரா மிதுன் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது, டெல்லி அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார். அவரை வரும் ஆகஸ்ட் 11ம் தேதி ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.