நடிகை மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் திலீப் விடுவித்ததை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு

நடிகை மீதான பாலியல் துன்புறுத்தல் வழக்கு: நடிகர் திலீப் விடுவித்ததை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு


கொச்சி,

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில், கடந்த 17.2.2017 அன்று பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து கேரவனில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் காரில் வந்த கும்பல் கேரவனை தடுத்து நிறுத்தி, அத்துமீறி நுழைந்து அங்கிருந்த நடிகையை பாலியல் துன்புறுத்தல் செய்ததோடு. ஆபாச புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டியது. இதுகுறித்து நடிகை அளித்த புகாரின் பேரில் அங்கமாலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கில் மலையாள பிரபல நடிகர் திலீப்புக்கும், நடிகைக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, திலீப் சதி திட்டம் தீட்டி நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்பட்டது. அதை தொடர்ந்து நடிகர் திலீப், பல்சர் சுனில் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த எர்ணாகுளம் நீதிமன்றம் நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி விடுதலை செய்துள்ளது. மேலும் அவரது நண்பர் சரத் என்பவரை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் விடுவித்துள்ளது. மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன். சுனில் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என்றும் எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணையும், ரூ. 50 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்தத் தீர்ப்பு குறித்து பாதிக்கப்பட்ட நடிகை முன்னதாக சமூக ஊடகங்களில் தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியிருந்தார். நடிகர் திலீப் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து பலரும் தங்களின் கண்டங்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், மாவட்ட நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. கேரள உயர் நீதிமன்றத்தின் கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்ததும் மேல்முறையீடு தாக்கல் செய்யப்படும் என சிறப்பு அரசு வழக்கறிஞர் வி.அஜய் குமார் கூறினார்.


admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *