நடிகை பாலியல் வழக்கு: கேரள நடிகர் திலீப் விடுவிப்பு – எர்ணாகுளம் கோர்ட்டு அதிரடி உத்தரவு | Actress sexual assault case: Kerala actor Dileep acquitted

எர்ணாகுளம்,
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே அத்தாணி பகுதியில், கடந்த 17.2.2017 அன்று பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு முடிந்து கேரவனில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் காரில் வந்த கும்பல் கேரவனை தடுத்து நிறுத்தி, அதன் உள்ளே அத்துமீறி நுழைந்தது. அங்கு இருந்த நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தது.
இதுகுறித்து நடிகை அளித்த புகாரின் பேரில் மாநில குற்றப்புலன் விசாரணை பிரிவு போலீசார் விசாரித்து வந்தனர். விசாரணையில் பெரும்பாவூர் அருகே கூவப்படியை சேர்ந்த பல்சர் சுனில் என்கிற சுனில் குமார் என்பவர் உள்பட சிலர் அந்த செயலில் ஈடுபட்டதும், அவர் நடிகையின் கார் டிரைவராக இருந்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கில் மலையாள பிரபல நடிகர் திலீப்புக்கும், நடிகைக்கும் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, திலீப் சதி திட்டம் தீட்டி நடிகைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறப்பட்டது. அதை தொடர்ந்து நடிகர் திலீப், பல்சர் சுனில் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை எர்ணாகுளம் முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. திட்டமிட்டு என்னை சிக்க வைத்து உள்ளதாக நடிகர் திலீப் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் 251 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த எர்ணாகுளம் நீதிமன்றம் நடிகர் திலீப் மீதான குற்றச்சாட்டிற்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி விடுதலை செய்துள்ளது. மேலும் அவரது நண்பர் சரத் என்பவரை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் விடுவித்துள்ளது. மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், சுனில் உள்ளிட்ட 6 பேர் குற்றவாளிகள் என்றும் எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.






