நடிகை ஐஸ்வர்யா ராயை தொடர்ந்து கணவர் அபிஷேக் பச்சனும் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு

புதுடெல்லி,
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட தனது புகைப்படங்கள் தவறாகப் பயன்படுத்தப் படுவதாகவும் அதை அனுமதியின்றி பயன்படுத்த தடை விதிக்கக் கோரியும் நடிகை ஐஸ்வர்யா ராய் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், “மார்பிங் செய்யப்பட்ட தன்னுடைய புகைப்படங்கள் ஆன்லைனில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவை செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள். அவருடைய முகத்தை காபி குவளைகள், வால்பேப்பர்கள், டி-சர்ட்களிலும் பயன்படுத்தி வியாபாரம் செய்கின்றனர்.
போலியாக உருவாக்கப்பட்ட சில நெருக்கமான புகைப்படங்கள், ஆபாச நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவது துரதிர்ஷ்டவசமானது. இது அவரது உரிமைகளை மீறும் செயல். அதை செயல்படுத்த உடனடியாக இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட் விசாரணையை அடுத்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்த நிலையில், அவரது கணவர் அபிஷேக் பச்சனும் இதேபோன்ற ஒரு வழக்கை டெல்லி ஐகோர்ட்டில் தொடர்ந்துள்ளார். தனது புகைப்படம் உள்ளிட்டவற்றை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார். இந்த மனு இன்று பிற்பகலில் விசாரணைக்கு வர உள்ளது.