நடிகைகள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவது ஏன்? – ஸ்ரீரெட்டி பரபரப்பு தகவல்

சென்னை,
பாலியல் தொல்லைகள் தரும் பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரை நிர்வாண போராட்டம் நடத்தி தெலுங்கு சினிமாவையே புரட்டி போட்ட நடிகை ஸ்ரீரெட்டி, தற்போது போதைப்பொருட்கள் பயன்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நடிகை ஸ்ரீரெட்டி செய்தியாளர்களின் சந்திப்பின் போது கூறியதாவது, “சினிமாவில் அரங்கேறும் பாலியல் கொடுமைகளை நான் வெளியே சொன்னபோது, யாருமே எனக்கு ஆதரவு தரவில்லை. சில நடிகைகள் என்னை விமர்சித்தார்கள். தற்போது போதை வழக்கில் நடிகர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது. ஒரு ‘பார்ட்டி’யில் எனக்கே வலுக்கட்டாயமாக உதட்டில் (கொகைன்) போதைப்பொருள் தடவி விட்டுள்ளார்கள். இதில் சம்பந்தப்பட்டவர்கள் பெரிய இடம். ஆனால் அவர்களை பற்றி பெரியளவில் எனக்கு தெரியாது.
மது மற்றும் போதைப்பொருளின் பிடியில் நடிகர்கள் தாண்டி நடிகைகளும் சிக்கி இருக்கிறார்கள். சருமம் மிளிர வேண்டும் என்பதற்காகவும், மன அழுத்தத்தை குறைப்பதற்காகவும், பசி-சோர்வு வரக்கூடாது என்பதற்காகவும் நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்துவதாக சொல்வார்கள். நான் அப்படி இல்லை. எப்போது கூப்பிட்டாலும் ரத்த பரிசோதனைக்கு வருவேன்.
பல ஆயிரம் கோடி புழங்கும் சினிமா துறையில் நடக்கும் குற்றங்களை வெளியே சொன்னேன். ஆனால் கடைசியில் நான் குற்றவாளியாகி நிற்கிறேன். உண்மையை சொல்லி போராடிய எனக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. எனக்கு அநியாயம் செய்தவர்களை ‘கர்மா’ இப்போது தண்டனை கொடுத்து கொண்டிருக்கிறது. இன்னும் சிலருக்கும் அது நடக்கும். அதையும் கண்கூடாக பார்ப்பேன்.
புதிதாக வரும் நடிகைகளுக்கு நான் சொல்லிக்கொள்வது, பெரிய ஆட்களுடன் சண்டை போடாதீர்கள். பிரச்சினைகள் குறித்து வெளியே சொல்லாதீர்கள். பிடிக்காவிட்டால் அங்கிருந்து நகர்ந்து விடுங்கள்.” இவ்வாறு அவர் கூறினார்.