நடிகர் விநாயகனை கைது செய்து சிகிச்சை அளிக்க வேண்டும்-அரசியல் கட்சியினர் கோரிக்கை

ஜெயிலர் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்து மிகவும் பிரபலமானவர் விநாயகன். திமிரு மற்றும் பல படங்களில் நடித்திருந்தாலும் ரஜினியுடன் நடித்த ஜெயிலர் படம் தான் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்று விட்டது. அவரது போதாத காலம் அடிக்கடி போதையில் சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் அடூர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விநாயகன் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் பாடகர் யேசுதாஸ், அடூர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் குறித்து அவதூறு கருத்துக்களை வெளியிட்டிருந்தார். பின்னர் தனது கருத்துக்களை திரும்ப பெற்றார்.
இதையடுத்து எர்ணாகுளம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முகமது ஷியாஸ் விநாயகன் பற்றி கூறுகையில், “விநாயகன் கலைஞர்களை அவமதிக்கும் ஒருவராக மாறி வருகிறார். விநாயகனை அரசாங்கம் தண்டிக்க வில்லை என்றால் பொதுமக்கள் வீதிகளில் கையாள்வார்கள். அவரை கைது செய்து சிகிச்சை அளிக்க வேண்டும்” என்றார். இதேபோல் அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.