நடிகர் ரவி மோகன் சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், பாபிடச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிட்டெட் நிறுவனத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் தாக்கல் செய்துள்ள மனுவில், “எங்களது நிறுவனத்தின் சார்பில் நடிகர் ரவி மோகனை வைத்து 2 படங்கள் தயாரிக்க திட்டமிட்டு, அவருடன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்பந்தம் செய்தோம். முதல் படத்துக்கு ரூ.15 கோடி ஊதியமாக பேசப்பட்டு, ரூ.5.9 கோடி முன்பணமாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், ஒப்பந்தத்தை மீறி மற்ற நிறுவனங்கள் படங்களில் அவர் நடித்ததால், கொடுத்த முன்பணத்தை ரவி மோகனிடம் திருப்பிக் கேட்டோம்.
அதற்கு அவர் முன்பணத்தை திருப்பி கொடுப்பதாகவும், ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொள்வதாகவும் கூறினார். ஆனால் இதுவரையில் முன்பணத்தை திருப்பித்தரவில்லை. தற்போது ரவி மோகன் தனது சொந்த படத்தயாரிப்பு நிறுவனம் மூலமாக புதிதாக ‘ப்ரோ கோட்’ என்ற படத்தை தயாரிப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். எனவே, எங்களிடம் வாங்கிய முன்பணம் ரூ.5.9 கோடியை வட்டியுடன் சேர்த்து இழப்பீடதாக திருப்பித்தர ரவி மோகனுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த பிரச்சினையில் நடிகர் ரவி மோகன் வாங்கிய அட்வான்ஸ் பணத்தை திரும்ப அளிப்பதில் என்ன சிரமம் உள்ளது. இதனால் எதிர்மறையான விளம்பரம் தான் கிடைக்கும்’ என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, ‘ரவி மோகன், ரூ.5.9 கோடிக்கான சொத்து ஆவணங்களை 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், இரு தரப்பிற்கு இடையேயான பிரச்சினையை தீர்க்க மத்தியஸ்தரை நியமித்தும் கோர்ட் உத்தரவிட்டது.