நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது: ஜனாதிபதி வழங்கினார்

புதுடெல்லி,
இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் ‘தேசிய விருதுகள்’ வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி வருகிறார்.
இந்த நிலையில், பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு வாழ்நாள் சாதனைக்கான தாதா சாகேப் பால்கே விருதை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கி கவுரவித்தார். அப்போது அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்ப மிகுந்த நெகிழ்ச்சியுடன் மோகன்லால் விருதைப் பெற்றுக்கொண்டார். பின்னர் மோகன்லாலின் திரைப்பயணம் குறித்த சிறப்பு காணொலி ஒன்றும் ஒளிபரப்பப்பட்டது. விருது வழங்குவதற்கு முன்னதாக மோகன்லாலுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு சால்வை அணிவித்தார்.
மோகன்லால் மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் 350-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். மோகன்லால் நடிப்பில் ‘தன்மாத்ரா’, ‘த்ரிஷ்யம்’, ‘வனபிரஸ்தம்’, ‘முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போல்’ ‘புலிமுருகன்’ ஆகியவை விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படங்களாகும்
சிறந்த நடிகருக்கான 2 தேசிய திரைப்பட விருதுகள், 9 கேரள மாநில விருதுகள் மற்றும் சர்வதேச விருதுகளையும் மோகன்லால் பெற்றுள்ளார். மேலும் மோகன்லாலுக்கு 2001-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2019-ம் ஆண்டு பத்ம பூஷண் விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.