நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்து செய்யப்படுமா? சுப்ரீம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு

பெங்களூரு,
கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் தர்ஷன். இவர், சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில் பெங்களூரு காமாட்சி பாளையா போலீசாரால் கடந்த ஆண்டு (2024) ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நடிகர் தர்ஷனுக்கு கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனால் அவர் சிறையில் இருந்து வெளியே வந்தார். தர்ஷன் போன்று, அவரது தோழியும், நடிகையுமான பவித்ரா கவுடாவுக்கும் இந்த வழக்கில் ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கி இருந்தது.
ரேணுகாசாமி கொலை வழக்கில் தர்ஷன், பவித்ரா கவுடா உள்பட 7 பேருக்கு ஐகோர்ட்டு வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் (ஜூலை) நிறைவு பெற்று, தீர்ப்பு அறிவிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தர்ஷன் ஜாமீனுக்கு எதிரான கர்நாடக அரசின் மேல் முறையீட்டு மனு மீது இன்று (வியாழக்கிழமை) தீர்ப்பு கூறப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது.
ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடக்கும் போது இந்த வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டு செய்த தவறை நாங்கள் செய்ய மாட்டோம் என்று நீதிபதி கூறி இருந்தார். இதனால் நடிகர் தர்ஷனின் ஜாமீன் சுப்ரீம் கோர்ட்டால் ரத்து செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.