நடிகர் சூர்யாவின் பாதுகாப்பு போலீஸ்காரரிடம் ரூ.42 லட்சம் மோசடி

சென்னை,
நடிகர் சூர்யா சென்னை தியாகராயர்நகர் ஆற்காடு தெருவில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். சூர்யாவுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் சூர்யாவிடம் தனிப்பட்ட பாதுகாப்பு போலீஸ்காரராக அந்தோணி ஜார்ஜ் பிரபு என்பவர் பணியாற்றி வருகிறார். அவர், மாம்பலம் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். நடிகர் சூர்யாவிடம் நான் கடந்த 4 ஆண்டுகளாக தனிப்பட்ட பாதுகாப்பு போலீஸ்காரராக பணியாற்றி வருகிறேன். சூர்யா வீட்டில் சுலோச்சனா (வயது 47) என்பவரும், அவரது தங்கை விஜயலட்சுமி (38) என்பவரும் வேலை செய்கிறார்கள். அவர்கள் 2 பேரும் சேர்ந்து என்னிடம் குறைந்த விலைக்கு தங்க நகைகள் வாங்கி தருவதாக ஆசை காட்டினார்கள்.
சுலோச்சனாவின் மகன்களான பாலாஜி (25), பாஸ்கர் (23) மற்றும் அவரது நண்பரான ராஜேஷ் ஆகியோர் குறைந்த விலையில் தங்க நாணயம் சீட்டு நடத்தி வருவதாகவும், அதில் பணம் கட்டும்படி கேட்டார்கள். நான் முதலில் ரூ.1.92 லட்சம் கொடுத்தேன். அந்த பணத்தை எனது தந்தையின் புற்றுநோய் சிகிச்சை செலவுக்காக கடனாக வாங்கி வைத்திருந்தேன். அதற்கு முதலில் 30 கிராம் தங்க நாணயங்களை கொடுத்தனர்.
இதனால் நான் தொடர்ந்து படிப்படியாக வங்கி கணக்கு மூலமாகவும், ரொக்கமாகவும் ரூ.50 லட்சம் வரை கொடுத்தேன். முதலில் 30 கிராம் தங்க நாணயம் கொடுத்த அவர்கள் பின்னர் தங்க நாணயம் எதுவும் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர். நான் கொடுத்த பணத்தில் ரூ.7.91 லட்சம் மட்டும் திருப்பி கொடுத்தார்கள். மீதி ரூ.42 லட்சத்தை மோசடி செய்துவிட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்த புகார் மனு தொடர்பாக மாம்பலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மோசடியில் ஈடுபட்டதாக சூர்யா வீட்டு வேலைக்கார பெண்கள் சுலோச்சனா, விஜயலட்சுமி, சுலோச்சனாவின் மகன்களான பாலாஜி, பாஸ்கர் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.