நடிகர் சுதீப்பின் பிறந்தநாளையொட்டி மனைவி உடல் உறுப்பு தானம்

பெங்களூரு,
பிரபல கன்னட நடிகரான சுதீப் சமீபத்தில் தனது 52-வது பிறந்தநாளை கொண்டாடினார். அதாவது கடந்த 2-ந்தேதி அவர் தனது பிறந்தநாளை ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த நிலையில் சுதீப்பின் மனைவி பிரியா தனது கணவரின் பிறந்தநாளையொட்டி தன்னுடைய உடல் உறுப்புகளை தானம் செய்ய கடிதம் கொடுத்துள்ளார். சுதீப்பின் கேர் பவுண்டேசன் மூலம் பிரியா, தனது உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க முன்வந்துள்ளார்.
இதுகுறித்து பிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில், சுதீப்பின் பிறந்தநாளில் ரசிகர்கள் ரத்ததானம், அன்னதானம் உள்ளிட்ட பிற சமூக பணிகளை செய்து வருகிறார்கள். நான் இந்த ஆண்டு அவரது பிறந்தநாளையொட்டி எனது உடல் உறுப்புகளை தானம் செய்ய பதிவு செய்துள்ளேன். உறுப்பு தானம் செய்யும் செயல்முறை மிகவும் எளிதானது. உங்கள் சிறிய முடிவால் ஒரு உயிரை காப்பாற்றுவதை விட பெரிய செயல் வேறெதுவும் இல்லை. அதுபோல் சுதீப்பின் ரசிகர்களும் செய்ய கேட்டுக்கொள்கிறேன். உறுப்பு தானம் செய்வதற்கு முதலில் நமது உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது நமது பொறுப்பு என்று கூறியுள்ளார்.