நடிகர் ‘கிச்சா’ சுதீப் அரசியலுக்கு வருகிறாரா? அவரே சொன்ன பதில்

பெங்களூரு,
கன்னட திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். அவர் நடித்த முதல் படம் கிச்சா. அதனால் அவரை அவரது ரசிகர்கள் கிச்சா சுதீப் என அழைக்கிறார்கள். இவர் நடிகர் விஜய்யின் புலி, ஈ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் நடிகர் கிச்சா சுதீப் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நடிகர் தர்ஷன் நடிப்பில் உருவான புதிய படம் (டெவில்) வெளியாக உள்ளது. அந்த படத்திற்கு நல்லது நடக்கட்டும். அவரது வேதனைகள் அவருக்குதான் தெரியும். அவரது ரசிகர்களும் வருத்தத்தில் உள்ளனர். இந்த நேரத்தில் ஏதாவது பேசினால் அது தவறாகிவிடும். சட்டம் என்று வந்தால் சட்டப்படியே அரசு செயல்படும். அதற்கு நாம் குறுக்கே நிற்கக்கூடாது.
சரியா?, தவறா? என்று கோர்ட்டில் முடிவாகும். சில விஷயங்களில் நான் தலையிட மாட்டேன். தனிப்பட்ட ஒருவரின் விஷயத்தில் தலையிட விரும்பவில்லை. நானும், தர்ஷனும் 18 வயது இளைஞர்களா?. எங்களுக்கு சொந்த அறிவு இல்லையா?. நாங்கள் 2 பேரும் ஏன் பிரிந்தோம் என்பது எங்களின் 2 பேருக்கு மட்டுமே தெரியும். சில நேரங்களில் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை சிலர் தூண்டுகிறார்கள். ஆனால் தற்போதைக்கு நான் அரசியலுக்கு வரமாட்டேன். அரசியலுக்கு வந்துவிட்டால் நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.