நடிகர் கார்த்திக், இயக்குனர் அமீர் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை,
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள தமிழக போலீஸ் டி.ஜி.பி. அலுவலக ‘இ-மெயில்’ முகவரி வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பும் தளம் போன்று மாறி உள்ளது. இந்த இ-மெயில் முகவரிக்கு தினந்தோறும் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்த வண்ணம் உள்ளது.
கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வீடுகளுக்கும், நடிகர் ரஜினிகாந்த், நடிகைகள் நயன்தாரா, திரிஷா உள்ளிட்ட திரையுலகத்தை சேர்ந்தவர்கள் வீடுகளுக்கும் மிரட்டல் கடிதங்கள் ஏற்கனவே வந்துள்ளன. இந்த நிலையில் போலீஸ் டி.ஜி.பி. அலுவலக இ-மெயில் முகவரிக்கு நேற்று முன்தினம் இரவு வந்த மிரட்டல் கடிதத்தில், சென்னை ஆழ்வார்ப்பேட்டை வீனஸ் காலனியில் உள்ள நடிகர் கார்த்திக் வீடு, தியாகராயநகர் பாண்டிபஜார் பகுதியில் உள்ள திரைப்பட இயக்குனர் அமீர் வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் குறிப்பிட்ட 2 பேரின் வீடுகளிலும் மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனை நடத்தினார்கள். வழக்கம் போல் இந்த கடிதமும் புரளி என்பது உறுதியானது. போலீசார் சோதனை நடத்தி சென்ற சில மணி நேரத்தில் இவர்கள் 2 பேரின் வீடுகளுக்கும் மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் கடிதங்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.