நடிகர் உன்னி முகுந்தனுக்கு கேரள நீதிமன்றம் சம்மன்

கொச்சி,
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் உன்னி முகுந்தன். இவர் கேரள ரசிகர்களையும் தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இவரது நடிப்பில் வெளியான ‘சீடன்’ மற்றும் ‘கருடன்’ ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இவர், தமிழில் நடிகர்கள் சசி குமார், சூரி ஆகியோர் நடிப்பில் உருவான ‘கருடன்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இவர் நடித்த மார்கோ படம் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது.
நடிகர் உன்னி முகுந்தனின் முன்னாள் மேலாளரான விபின் குமார், சமூக ஊடகத்தில் நடிகர் டொவினோ தாமஸின் ‘நரிவேட்டா’ என்ற திரைப்படத்தைப் பாராட்டி ஒரு பதிவை வெளியிட்டார். இந்த பதிவு உன்னி முகுந்தனுக்கு கோபத்தை ஏற்படுத்தியதாகவும், அதன் விளைவாக ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது, அவர் தன்னைத் தாக்கி, ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதாகவும் விபின் குமார் தனது புகாரில் தெரிவித்திருந்தார். இதை உன்னி முகுந்தன் மறுத்திருந்தார். முன்னதாக, எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றத்தில் உன்னி முகுந்தன் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். அப்போது, காவல்துறையினர் ஜாமீன் பெறக்கூடிய பிரிவுகளின் கீழ் மட்டுமே வழக்குப்பதிவு செய்துள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும், காவல்துறை விசாரணையைத் தொடரலாம் என்றும் அனுமதி அளித்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையை காவல்துறை நடத்தி, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக, நீதிமன்றம் தற்போது உன்னி முகுந்தன் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளது. தனது முன்னாள் மேலாளர் விபின் குமாரை தாக்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், மலையாள நடிகர் உன்னி முகுந்தனுக்கு காக்கநாடு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் அக்டோபர் 27-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘மா வந்தே’ என்ற புதிய திரைப்படத்தில் பிரதமர் நரேந்திர மோடி கதாபாத்திரத்தில் உன்னி முகுந்தன் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.