நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஜாமீன் கோரிய வழக்கில் நாளை தீர்ப்பு

சென்னை,
கொகைன் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை நுங்கம்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்படவில்லை என்பதால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கிருஷ்ணா தனது மனுவில் கூறியிருந்தார். அதே சமயம், இருவருக்கும் ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்களை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதையடுத்து நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணாவின் ஜாமீன் மனுக்கள் மீது 8-ந்தேதி(நாளை) தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.