நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு விஷால் இரங்கல்

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு விஷால் இரங்கல்



சென்னை,

உடல்நலக்குறைவால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். அவரது மறைவு ரசிகர்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு விஷால் இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளப் பககத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

“அன்புத் தோழர், மக்களை சிரிப்பிலும் சிந்தனையிலும் மூழ்கடித்த திறமைசாலி நடிகர் ரோபோ சங்கர் அவர்களின் மறைவு என் இதயத்தை கனமாக்கியது.

இரும்புத்திரை மற்றும் சக்ரா ஆகிய படங்களில் அவருடன் சேர்ந்து நடித்த நினைவுகள் மறக்க முடியாதவை, அவர் காமெடியில் அனைவரையும் மகிழ வைப்பது மட்டுமல்லாமல், அவர் கலை மீது கொண்ட அன்பும், நடிப்பை வெளிப்படுத்துவதில் அர்ப்பணிப்பு கொண்ட நல்ல மனிதர்.

படப்பிடிப்பு தளத்தில் அவர் இருந்தாலே அனைவருக்கும் உற்சாகம், மகிழ்ச்சி இயற்கையாக வந்துவிடும். மற்றும் சக நடிகர்களை மதிக்கும் தன்மை, அனைவரையும் தன் நண்பராக கருதும் குணம் கொண்டவர்.

ரோபோ சங்கர் அவர்களின் திரையுலக பயணம் எளிதானதல்ல. மேடை நிகழ்ச்சியில் தொடங்கி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தனித்துவத்தை நிலை நிறுத்தி, இன்று முன்னணி நடிகர்களுடன் இணைந்து பெரிய படங்களில் இடம் பிடித்தது அவரின் கடின உழைப்பின் சான்று. சாதாரண குடும்பத்தில் பிறந்தவர், ஆனால் தன் முயற்சியாலும் திறமையாலும் ரசிகர்களின் இதயத்தில் நிலைத்தவர்.

அவருடன் இணைந்து நடித்த நாட்கள் என் வாழ்க்கையின் அழகான தருணங்களாகவே என்றும் நினைவில் நிற்கும். திரையுலகம் ஒரு சிறந்த நடிகரையும், நாம் அனைவரும் ஒரு நல்ல மனிதரையும் இழந்துவிட்டோம்.

அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *