”தேசிய விருதை ஷாருக்கானுடன் பகிர்ந்து கொள்ளவது எனது பாக்கியம்”

மும்பை,
71வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதை விக்ராந்த் மாஸ்ஸி மற்றும் ஷாருக்கான் பகிர்ந்துகொள்கின்றனர்.
இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் ‘தேசிய விருதுகள்’ வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்தவகையில் 71-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் நேற்று மாலை அறிவிக்கப்பட்டன. 2023-ம் ஆண்டு திரைப்பட தணிக்கை வாரியத்தால் சான்று அளிக்கப்பட்ட திரைப்படங்கள் விருதுக்கான தேர்வில் பங்கேற்றன.
இதில் எதிர்பார்த்தது போலவே சிறந்த திரைப்படமாக ’12த் பெயில்’ தேர்வு செய்யப்பட்டு இதில் நடித்த விக்ராந்த் மாஸ்ஸிக்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. அதேபோல் சிறந்த நடிகருக்கான விருது ஜவான் படத்திற்காக ஷாருக்கானுக்கும் அறிவிக்கப்பட்டது. இருவரும் அந்த விருதை பகிர்ந்துகொள்கின்றனர். 35 ஆண்டுகளாக சினிமாவில் கோலாச்சும் நடிகர் ஷாருக்கான் முதல் முறையாக சிறந்த நடிகர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், ஷாருக்கான் போன்ற ஒரு ஐகானுடன் தனது முதல் தேசிய விருதைப் பகிர்ந்து கொள்வது பாக்கியம் என்று விக்ராந்த் மாஸ்ஸி தெரிவித்திருக்கிறார். மேலும், இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குனர் விது வினோத் சோப்ராவுக்கும் மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
12த் பெயில் படத்தில் விக்ராந்த், மனோஜ் குமார் சர்மா என்ற யுபிஎஸ்சி ஆர்வலராக நடித்திருந்தார். போட்டித் தேர்வுகளுக்குத் தகுதி பெற பல தடைகளை தாண்டி சென்று வெற்றியடையும் வகையில் இப்படம் அமைந்திருந்தது. 2023-ல் வெளியான இந்தப் படம் உலகளவில் பாராட்டைப் பெற்றது மற்றும் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலைப் பெற்றது.