தேசிய விருது வென்ற ஜி.வி.பிரகாஷுக்கு பியானோவை பரிசளித்த ஏ.ஆர்.ரகுமான்

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஜி.வி.பிரகாஷ். இவர் கடந்த 2006-ம் ஆண்டு வசந்தபாலனின் இயக்கத்தில் வெளியான ‘வெயில்’ திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். தொடர்ந்து மதராசப்பட்டினம், ஆயிரத்தில் ஒருவன், ஆடுகளம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து புகழ் பெற்ற ஜி.வி.பிரகாஷ், 2015-ம் ஆண்டு வெளியான ‘டார்லிங்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார்.
தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வரும் ஜி.வி.பிரகாஷ், இசையமைப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் இசைக்காக ஜி.வி.பிரகாஷ் முதல் முறையாக தேசிய விருது வென்றார். அதனை தொடர்ந்து, தற்போது தனுஷின் ‘வாத்தி’ படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை ஜி.வி.பிரகாஷ் 2-வது முறையாக பெற்றுள்ளார்.
இதனையொட்டி அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அந்த வகையில், இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அண்மையில் ஜி.வி.பிரகாஷுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, அவருக்கு சிறப்பு பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமானின் மூத்த சகோதரி ஏ.ஆர்.ரெய்ஹானாவின் மகனான ஜி.வி.பிரகாஷ், 90-களில் ரகுமானின் இசையில் வெளியான ‘சிக்கு புக்கு ரெயிலே’ உள்ளிட்ட பல ஹிட் பாடல்களில் குழந்தை பாடகராக கலக்கியிருக்கிறார்.
இந்த நிலையில், தற்போது 2-வது முறையாக தேசிய விருது வென்றிருக்கும் தனது மருமகன் ஜி.வி.பிரகாஷுக்கு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒரு அழகிய வெண்ணிற பியானோவை பரிசாக வழங்கியுள்ளார். இது குறித்து ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ், “இது எனக்கு கிடைத்த மிகச்சிறந்த பரிசு. இதை விட வேறு என்ன சிறந்த பரிசை நான் கேட்டுவிட முடியும்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.