தேசிய விருதுடன் வந்து சிவாஜி கணேசனின் உருவப் படத்தின் முன் விழுந்து வணங்கிய எம்.எஸ்.பாஸ்கர்

சென்னை,
71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நடைபெற்றது. விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார். திரைப்படத்துறையின் மிகப்பெரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை நடிகர் மோகன்லாலுக்கு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து சிறந்த இசையமைப்பாளர் விருது ‘வாத்தி’ படத்துக்காக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு வழங்கப்பட்டது.
அதையடுத்து சிறந்த துணை நடிகருக்கான விருது நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் மலையாள நடிகர் விஜயராகவன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. எம்.எஸ்.பாஸ்கருக்கு ‘பார்க்கிங்’ படத்துக்காகவும், விஜயராகவனுக்கு பூக்காலம் படத்துக்காகவும் வழங்கப்பட்டது. எம்.எஸ்.பாஸ்கர் வேட்டி-சட்டையுடன் மிகவும் எளிமையாக வந்து விருதை பெற்றார்.
இந்த நிலையில், டெல்லியில் இருந்து சென்னை வந்த எம்.எஸ்.பாஸ்கர் தேசிய விருதுடன் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு சென்று விஜயகாந்த் நினைவிடத்தில் விருதை வைத்து தலை வணங்கி மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீட்டிற்கு வந்து அவரது உருவப் படத்திற்கு முன் விருது மற்றும் அதனுடன் வழங்கிய சான்றிதழை வைத்து மரியாதை செய்தார். அப்போது சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார் உடனிருந்தார்.