துருவ் விக்ரமுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மாரிசெல்வராஜ்

சென்னை,
தனது திறமையான நடிப்பின் மூலம் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் துருவ் விக்ரம். இவர் தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘பைசன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றன.
இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன், பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 17-ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், நடிகர் துருவ் விக்ரம் இன்று தனது 28 பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பைசன் பட இயக்குனர் துருவ் விக்ரமுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ‘பைசன்’ பட சிறப்பு போஸ்டர் வெளியிட்டுள்ளார்.
மேலும் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “எனது அன்பின் துருவ்க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். பிரமிக்க வைக்கும் உன் உழைப்பின் மூலம் உன் கனவுகள் அத்தனையும் சாத்தியமாகட்டும். நிச்சயம் வெல்வாய் நீ. வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.