தீபாவளிக்கு வெளியாகும் சிவகார்த்திகேயனின் 'எஸ்கே 23' படம் ?

சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘அமரன்’ படம் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் சுமார் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் 24-வது படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் இவர் ‘சூரரைப் போற்று’ படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் எஸ்கே 25 எனும் திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
சிவகார்த்திகேயன் 23-வது திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘எஸ்கே 23’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசை அமைக்கிறார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்புகளும் ஏறத்தாழ நிறைவடைந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ‘சிங்க நடை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே இந்த படம் கோடைவிடுமுறையில் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் 2025 தீபாவளிக்கு வெளிவரும் என புதிய தகவல் தெரிவிக்கின்றன.
அதாவது விஜயின் ‘ஜன நாயகன்’ திரைப்படம் 2026 பொங்கலுக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. எனவே இந்த தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே 23’ படம் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று ‘அமரன்’ திரைப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.