திரையில் 25 நாட்களை கடந்த “சிறை” திரைப்படம்

சென்னை.
நடிகர் விக்ரம் பிரபுவின் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்த ‘டாணாக்காரன்’ படத்தைத் தொடர்ந்து. அவர் மீண்டும் ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட கதையில் நடித்திருக்கிறார்.இயக்குநர் தமிழ், தான் சந்தித்த ஓர் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘சிறை’ என்ற பெயரில் எழுதிய கதையே தற்போது திரைப்படமாக கடந்த டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் சிறைக் கைதியின் காதல் கதையாகவும் இஸ்லாமியர்கள் மீதான குற்றப்பார்வை குறித்தும் அழுத்தமாக பேசியது.
இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவுடன் அறிமுகமாகும் எல்.கே.அக்ஷய் குமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நாயகியாக அனந்தா நடித்திருக்கிறார்.‘சிறை’ திரைப்படம் கிறிஸ்துமஸ் தினத்தன்று உலகமெங்கும் வெளியானது. ‘சிறை’ படம் ரசிகர்களிடையே மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமின்றி வசூலையும் குவித்தது. இப்படம் வெளிவந்து 25 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 30 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘சிறை’ படம் குடியரசு தினத்தையொட்டி வருகிற 23-ந்தேதி ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் வெளியாகிறது.
விமர்சகர்களால் 2025ம் ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாகப் பாராட்டுகளை பெற்ற ‘சிறை’ படத்தின் வசூல் சிறிய பட்ஜெட் படங்களின் மீது தயாரிப்பாளர்களுக்கு கவனம் அதிகரித்திருக்கும் என்றும் ரசிகர்கள் கருதுகின்றனர்.






