திரைத்துறையை ஊக்குவிப்பதற்காக ஓ.டி.டி. தளம் தொடங்கும் கர்நாடக அரசு

பெங்களூரு,
கர்நாடக பட்ஜெட்டில், கன்னட திரைத்துறையை ஊக்குவிப்பதற்காக ஓ.டி.டி. தளம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஓ.டி.டி. தளம், டிஜிட்டல் வடிவில் திரைப்படங்களை நேரடியாக ஒளிபரப்புவது ஆகும். இவற்றை நடைமுறைப்படுத்த ஏதுவாக 12 பேர் கொண்ட ஒரு நிபுணர் குழுவை அமைத்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
செய்தி-மக்கள் தொடர்புத்துறை கமிஷனர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் உறுப்பினர்களாக மகபூப் பாஷா, கர்நாடக திரைப்பட அகாடமி தலைவர் சாதுகோகிலா, சினிமா தயாரிப்பாளர்கள் ஸ்ரீகாந்த், ராக்லைன் வெங்கடேஷ், நடிகர் துனியா விஜய், ஐவான் டிசல்வா, தேசாத்திரி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த குழுவினர் மத்திய அரசு மற்றும் பிற மாநிலங்களில் சினிமா வளர்ச்சிக்கு பின்பற்றப்படும் வழிமுறைகளை ஆய்வு செய்து ஒரு வரைவு அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்யும். சினிமாவை ஒரு தொழிலாக கருதி, தொழில்துறைக்கு வழங்கப்படும் சலுகைகளை சினிமாத்துறைக்கும் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
அதேபோல் சமூக, கலாசார, வரலாற்று கதைகளை கொண்ட சினிமாக்களை டிஜிட்டல் மற்றும் டிஜிட்டல் அல்லாத வடிவத்தில் பாதுகாப்பது தொடர்பாக அரசுக்கு பரிந்துரைகள் வழங்க ஒரு குழுவை அரசு அமைத்துள்ளது. இந்த குழுவுக்கும் செய்தி-மக்கள் தொடர்புத்துறை கமிஷனர் தலைமை தாங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.