திரைத்துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்|Ajith completes 33 years in the film industry

சென்னை,
நடிகர் அஜித்குமார் திரைத்துறைக்கு வந்து 33 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார்.
யாருடைய உதவியும் இல்லாமல் திரைத்துறையில் நுழைந்து தனது கடின உழைப்பினால் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி ஸ்டார் நடிகராக உருவெடுத்தவர் அஜித்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்குமார் 1990-ம் ஆண்டு ‘என் வீடு என் கணவர்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து 1993-ல் வெளிவந்த ‘அமராவதி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
பின்னர் ‘ஆசை’, ‘காதல் கோட்டை’, ‘வாலி’, ‘அமர்க்களம்’, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ போன்ற படங்கள் அவருக்கு பெரிய ரசிகர்களைப் பெற்றுத்தந்தது.
காதல் நடிகராக மட்டுமே அறியப்பட்ட அஜித், ‘தீனா’, ‘சிட்டிசன்’, ‘ரெட்’, ‘வில்லன்’ படங்களில் தன்னை ஆக்சன் நாயகனாகவும் வலுப்படுத்திக்கொண்டார். பில்லா திரைப்படம் அவரை உச்சத்துக்குக் கொண்டு சென்றது. மங்காத்தா படத்தில் நெகடிங் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கொண்டாட வைத்தார்.
தற்போது ஆக்சன் மற்றும் குடும்ப படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கார் ரேசிலும் ஈடுபாடுடன் கலந்து கொண்டு சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வருகிறார் அஜித். பெல்ஜியமில் சமீபத்தில் நடைபெற்ற கிரவுட் ஸ்டிரைக் ஸ்பா ஜிடி3 சாம்பியன்ஷிப் போட்டியின் ப்ரோ ஏ.எம். பிரிவில் அஜித்குமார் கார் ரேஸ் அணி முதலிடத்தை பிடித்து அசத்தியிருந்தது.
ஏற்கனவே, துபாயில் நடந்த ரேஸில் அஜித்தின் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணி 3வது இடம் பிடித்து சாதித்தது. இத்தாலி மற்றும் பெல்ஜியத்தில் நடந்த போட்டிகளிலும் பரிசுகளை வென்று இருந்தது.
இந்நிலையில், நடிகர் அஜித் திரைத்துறையில் கதாநாயகனாக அறிமுகமாகி 33 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதையொட்டி பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.