திரைத்துறையில் 28 ஆண்டுகளை நிறைவு செய்த சூர்யா

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது, பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல கலெக்ஷன் செய்தது. இப்படத்தை தொடர்ந்து சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், சூர்யா தன் திரைவாழ்க்கையில் இன்றுடன் 28 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கின்றார். நடிகர் என்பதையும் தாண்டி தயாரிப்பாளராகவும் வெற்றிகரமாக வலம் வருகின்றார் சூர்யா.
சூர்யா வாழ்க்கையில் மிகவும் முக்கிய படமான நேருக்கு நேர் திரைப்படம் இன்றுடன் வெளியாகி 28 ஆண்டுகள் ஆகிவிட்டது. வசந்த் இயக்கத்தில் விஜய் -சூர்யா ஆகியோரது நடிப்பில் 1997ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி வெளியானது. இப்படம் மக்கள் மத்தியில் வெற்றி பெற்றாலும் ஒரு பக்கம் இந்த படத்தினால் பெரும் விமர்சனத்தை சூர்யா சந்தித்தார். நடிப்பின் மீது ஆர்வம் இல்லை என்றாலும், முதல் படத்திலேயே கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் தொடர்ந்து நடிப்பதென்றே முடிவை சூர்யா எடுத்தார்.
கேமரா முன்பு நின்றாலே அப்படி ஒரு பயம் சூர்யாவிற்கு ஏற்படுமாம். பயத்தினாலும் பதட்டத்தினாலும் சூர்யாவால் சரியாக நடிக்க முடியாமல் போக படத்திலிருந்து தான் விலகிக்கொள்வதாக கூறியிருக்கின்றார். ஆனால் இயக்குனர் வசந்த் மற்றும் படக்குழுவினர் சூர்யாவிற்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுக்க அவர் இப்படத்தில் நடித்து முடித்தார். இறுதியில் அவர் அறிமுகமாகி ஐந்து வருடங்கள் கழித்தே நந்தா என்ற திரைப்படத்தின் மூலம் அவருக்கு முதல் வெற்றி கிடைத்தது.
இந்நிலையில், சூர்யா 28 ஆண்டுகளை நிறைவு செய்த நிலையில், 2டி நிறுவனம் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.