திருவள்ளுவருக்கு அரசியல் சாயம் பூசுவதா? இயக்குனர் பாலகிருஷ்ணன் கண்டனம்

சென்னை,
கர்மவீரர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ், தற்போது திருவள்ளுவரின் வாழ்க்கையை ‘திருக்குறள்’ என்ற திரைப்படமாக தயாரித்துள்ளது. ஏ.ஜே.பாலகிருஷ்ணன் இயக்கியுள்ள இப்படத்தில் வள்ளுவராக கலைச்சோழன், வாசுகியாக தனலட்சுமி நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைத்துள்ளார்.
படத்தின் டிரெய்லர் மற்றும் போஸ்டர்கள் வெளியான நிலையில், புதிதாக ஒரு சர்ச்சை முளைத்துள்ளது. திருவள்ளுவரையும், மத்திய – மாநில அரசுகளையும் ஒப்பிட்டு சில கருத்துகள் இணையத்தில் வெளியானது.
இதற்கு படத்தின் இயக்குனர் பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்து கூறுகையில், “அந்த மாடலா, இந்த மாடலா? என்ற விவகாரமே இங்கு தேவையில்லை. அறவழியில் வாழ்ந்த மகானை பற்றி படத்தில் சொல்கிறோம்.
சமீபத்தில் கூட ஒரு அரசியல் பிரபலம் என்னிடம் திருவள்ளுவர் குறித்து அரசியல் ரீதியாக கேட்டார். அப்போதே சொல்லிவிட்டேன், அரசியலையும், திருவள்ளுவரையும் இழுக்கவேண்டாம். கடவுளை இழுத்தார்கள். இப்போது கடவுள் போல வாழ்ந்த ஒரு மகானை இழுக்க பார்க்கிறார்கள்.
இப்படம் வருகிற 27-ந்தேதி திரைக்கு வரும் நிலையில், திருவள்ளுவருக்கு அரசியல் சாயம் பூசவேண்டாம். அவரை நடுநிலையாக படத்தில் காட்டியுள்ளோம். தேவையற்ற சர்ச்சைகளை பரப்ப வேண்டாமே…’, என்றார்.