திருமணம் ஆகாமல் குழந்தைக்கு தாயான பாவனா ராமண்ணா

கன்னட திரை உலகில் பிரபல நடிகையாக இருப்பவர் பாவனா ராமண்ணா. சினிமா மட்டுமின்றி அரசியல் கட்சியிலும் இணைந்து சமூக நல பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.
பாவனா ராமண்ணா இதுவரை திருமணம் செய்யவில்லை. ஆனால் தாயாக வேண்டும் என்று அவருக்கு ஆசை இருந்தது. இதைத்தொடர்ந்து செயற்கை கருத்தரிப்பு முறையில் தாயாக வேண்டும் என்று விரும்பிய பாவனா சிகிச்சைக்கு பின்பு ஐ.வி.எப். மூலம் கர்ப்பமடைந்தார். சமீபத்தில் இவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்தது. விழாவில் அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பங்கேற்றனர். அப்போது தான் இரட்டை குழந்தைகளுக்கு தாயாக போகிறேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். குழந்தை பெறும் மகிழ்ச்சியில் இருந்த பாவனா 7-வது மாதத்தில் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. கருவில் இருக்கும் இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பிரச்சினை இருப்பது ஸ்கேன் மூலம் தெரிய வந்தது.
இதனால் மருத்துவரின் ஆலோசனைப்படி 8-வது மாதத்தில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சையின் போது இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை இறந்து விட்டது. மற்றொரு குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறது. இரட்டையர்களை எதிர்பார்த்து காத்திருந்த பாவனா தற்போது ஒரு பெண் குழந்தைக்கு மட்டும் தாயாக இருக்கிறார்.