“திருக்குறள்” திரை விமர்சனம் | “Thirukkural” movie review

சென்னை,
திருவள்ளுவர் வாழ்க்கையின் ஒரு பகுதி.
வள்ளுவ நாட்டில் மனைவி தனலட்சுமி மற்றும் குழந்தை சகிதமாக மகிழ்ச்சியாக வாழ்கிறார், கலைச்சோழன். ஒருகட்டத்தில் உலக பொதுமறையாம் திருக்குறளை எழுத தொடங்குகிறார், கலைச்சோழன்.
இதற்கிடையில் இரு நாடுகளுக்கிடையே போர் சூழ, அறத்தின் வழி நின்று மக்களை காப்பாற்ற போராடுகிறார், கலைச்சோழன். இந்தச் சூழலில் படைத்தலைவனான குணாபாபுவுக்கும், பாதினிகுமாருக்கும் இடையே காதல் ஏற்படுகிறது. போர் நடைபெறும் சூழலில் திருக்குறளை அவர் எழுதி முடித்தாரா? போரின் முடிவு என்ன? குணாபாபு – பாதினிகுமார் காதல் என்ன ஆனது? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்கிறது மீதி கதை.
நடை, உடை, பேச்சு என திருவள்ளுவராகவே வாழ்ந்துள்ளார், கலைச்சோழன். அவரது உடல் மொழியும், இனிய தமிழ் உச்சரிப்பும் கவனம் கொள்ள செய்கிறது. கலைச்சோழனுக்கு சற்றும் சளைக்காத நடிப்பை கொடுத்து வியக்க வைக்கிறார், தனலட்சுமி. காதல் மொழிகளை கண்கள் வழியாக அவர் பேசும் இடம் அழகு.
குணாபாபு, பாதினிகுமாரின் காதல் ரசிக்க வைக்கிறது. சுப்பிரமணிய சிவா, ஓ.ஏ.கே.சுந்தர், சுகன்யா, சந்துரு, கொட்டாச்சி, கார்த்தி, ஹரிதாஸ்ரீ என நடித்த அத்தனை பேரும் கவனம் ஈர்க்கிறார்கள்.கடந்த காலத்தை கண் முன் நிறுத்தும் எட்வின் சகாய் ஒளிப்பதிவு படத்துடன் ஒன்ற செய்கிறது. இளையராஜாவின் இசை உயிரோட்டமாய் பாய்கிறது.
‘முல்லைவாசம்…’, ‘கொத்து கொத்தாய்…’ பாடல்கள் மீண்டும் கேட்கும் ரகம். கதாபாத்திரங்களின் நடிப்பு, சலிப்பு தட்டாத தமிழ் வசனங்கள் பலம். மெதுவாக நகரும் திரைக்கதை பலவீனம். திருவள்ளுவர் காலத்தை கண்முன் நிறுத்தி, அதில் காதல், மோதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை புகுத்தி ரசிக்க வைத்திருக்கிறார், இயக்குனர் ஏ.ஜெ.பாலகிருஷ்ணன்.
திருக்குறள் – பெருமை.