தாக்குதல் சம்பவம் குறித்து நடிகர் சயிப் அலிகான் வாக்குமூலம்

மும்பை,
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சயிப் அலிகான். இவர் மும்பை பாந்திரா மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 16-ந்தேதி இவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் சயிப் அலிகான் மீது சரமாரியாக கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடினார். இதனால் படுகாயம் அடைந்த சயிப் அலிகான் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரது உடலில் 6 இடங்களில் கத்திக்குத்து விழுந்ததாகவும், முதுகு தண்டில் ஏற்பட்ட கத்திக்குத்து காயத்தால் முதுகெலும்பு திரவம் கசிந்ததாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து, 5 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு கடந்த 21ம் தேதி நடிகர் சயிப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்திய முகமது இஸ்லாம் என்ற நபரை போலீசார் கடந்த 18ம் தேதி கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அங்கு அவரை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
கைதான முகமது இஸ்லாமின் காவல் இன்றுடன் நிறைவடைந்ததால் இன்று போலீசார் அவரை மும்பை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது, நீதிபதி கைதான முகமதை வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பிய சயிப் அலிகானிடம் மும்பை பாந்த்ரா போலீசார் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.�
சயிப் அலிகான்� வாக்குமூலத்தில், “இந்தச் சம்பவம் நடந்தபோது நானும், என் மனைவி கரீனாவும் படுக்கை அறையில் இருந்தோம். அப்போது என் வீட்டில் உதவியாளராக பணி புரிந்துவரும் எலியாமா பிலிப்பின் அலறல் சத்தம் கேட்டது. அதாவது, எலியாமா பிலிப் என்னுடைய இளைய மகனான ஜஹாங்கீரை பார்த்துக் கொள்கிறார். இதனால் பொதுவாகவே மகனின் அறையில்தான் எலியாமா பிலிப் தூங்குவார். எலியாமா பிலிப்பின் சத்தம் கேட்டவுடன் என்னவென்று பார்க்க சென்றேன். அப்போது ஜஹாங்கீர் அழுது கொண்டு இருந்த நிலையில், அந்த மர்ம நபரைப் பிடிக்க முயன்றேன்.
இதனால் அந்த மர்ம நபர் எனது முதுகு, கழுத்து மற்றும் கைகளில் கத்தியால் குத்தினான். காயம் ஏற்பட்ட நிலையிலும் கொள்ளையனை அறைக்குள் தள்ளி அறையை பூட்டினேன். ஆனால்�அந்த நபர் தப்பித்துவிட்டான். எலியாமாதான் முதலில் அந்த மர்ம நபரைப் பார்த்துள்ளார். மகனின் அறையில் புகுந்த அந்த நபர் ஒரு கோடி ரூபாயைக் கேட்டு மிரட்டியதாக எலியாமா என்னிடம் தெரிவித்தார். இந்த மோதலில் வீட்டு உதவியாளர் எலியாமாவுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து என்னை உடனடியாக லீலாவதி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்” என்றார்.
சயிப் அலிகானின் அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்த நபர் திருடும் நோக்கத்துடன் உள்ளே நுழைந்ததாக போலீஸார் தெரிவித்தனர். தாக்குதல் நடந்த சயிப் அலி கானின் வீட்டில் சேகரிக்கப்பட்ட கைரேகைகள் முகமதின் கைரேகைகளுடன் ஒத்துப்போவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்த குழாய் மூலமாகவே அந்த நபர் 11வது மாடிக்கு ஏறியதாகவும் அந்த குழாயில் இருந்தே கைரேகைகள் எடுக்கப்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.