"தலைவன் தலைவி" படத்தின் "பொட்டல முட்டாயே" வீடியோ பாடல் வெளியானது

சென்னை,
இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை நித்யா மேனன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ‘தலைவன் தலைவி’. இது விஜய் சேதுபதியின் 52-வது படமாகும். விஜய் சேதுபதி – பாண்டிராஜ் இருவரும் முதல் முறையாக இணைந்துள்ளதால் இந்த படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. அதற்கேற்ப 1,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
கணவன் – மனைவி உறவுச் சிக்கல்களை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.தமிழில் கிடைத்த வரவேற்பால் இப்படம் தெலுங்கிலும் வெளியானது. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.
விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியான ‘தலைவன் தலைவி’ படத்தில் இடம்பெற்ற ‘பொட்டல முட்டாயே’ பாடல் யூடியூப்-ல் 3 கோடி பார்வைகளைக் கடந்துள்ளது.
இந்நிலையில், ‘தலைவன் தலைவி’ படத்தில் இடம்பெற்ற ‘பொட்டல முட்டாயே’ வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.இப்பாடலை சுப்லக்ஷினி உடன் சந்தோஷ் நாராயணன் பாடியுள்ளார். வரிகளை விவேக் எழுதியுள்ளார். பாபா பாஸ்கர் இப்பாடலுக்கான நடனத்தை இயக்கியுள்ளார்.