தர்ஷனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என நீதிபதி முன் கூறிய நபரால் பரபரப்பு

பெங்களூரு,
சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி கொலையில் நடிகர் தர்ஷனை பல்லாரி சிறைக்கு மாற்றக்கோரிய மனு மீதான விசாரணை பெங்களூரு சிட்டி சிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் நடைபெற்றது. விசாரணைக்கு நடக்கும் போது திடீரென்று ஒரு நபர் கோர்ட்டு அறைக்குள் அத்துமீறி நுழைந்தார்.
பின்னர் நீதிபதி முன்பு, ரேணுகாசாமி கொலையில் தர்ஷனுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கூறினார். அந்த நபர் கையில் ஒரு மனுவையும் வைத்திருந்தார். உடனே அந்த நபரிடம், நீங்கள் யார்? என்று கேட்டார். அப்போது அவர், நான் ரவி பெலகெரேவின் ஆதரவாளர் என்று கூறினார். இதனால் கோபம் அடைந்த நீதிபதி, உங்களிடம் இருந்து நேரடியாக மனுவை வாங்க சாத்தியமில்லை.
எந்த ஒரு வழக்கிலும் அரசு மூலமாக தான் மனுவை அளிக்க வேண்டும் என்று கூறினார். அவரை வெளியேற்றவும் நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அந்த நபரை கோர்ட்டு அறையில் இருந்து போலீசார் அழைத்து சென்றனர். இந்த சம்பவத்தால் கோர்ட்டில் இருந்து சிறிது நேரம் பரபரப்பு உண்டானது.