தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எதிராக ‘பெப்சி’ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எதிராக ‘பெப்சி’ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


சென்னை,

புதிய அமைப்பு தொடங்குவதாக அறிவித்த தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எதிராக பெப்சி நிர்வாகிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யுமாறு தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துக்கு (பெப்சி) பதிலாக, புதிய தொழிலாளர் சம்மேளனம் ஒன்றை தொடங்கப்படும் என்று தயாரிப்பாளர் சங்கம் சமீபத்தில் அறிவித்தது. இதை கண்டிக்கும் விதமாக சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இன்று பெப்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராதாரவி, பி.சி.ஸ்ரீராம், பேரரசு, லிங்குசாமி, ரவி மரியா உள்பட பலர் கலந்துகொண்டனர். கன்னடம், மும்பை, கேரளா, பெங்களூருவை சேர்ந்த திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் செல்வமணி பேசியதாவது, பெப்சி ஒரு பலம் கொண்ட யானை. நான் முடிந்தவரை ஒரு பாகனாக, கரும்பும், வெல்லமும் கொடுத்து கட்டுப்படுத்தி வைத்திருக்கிறேன். ஆனால் தயாரிப்பாளர்கள் சங்கம் ஊசி குத்துவது போல குத்திக்கொண்டே இருந்தால், பாகனை மீறி யானை உங்களை காலி செய்துவிடும். எங்கள் மீது என்ன குறை இருந்தாலும் சொல்லுங்கள். திருத்திக்கொள்ள தயாராக இருக்கிறோம். எங்களுக்கு ஈகோ இல்லை. எங்கள் தொழிலாளர்கள் நன்றாக இருக்கவேண்டும். இருக்கும் தொழிலாளர்களுடன், புதிய தொழிலாளர்கள் வேண்டாம் என்பதே எங்கள் வேண்டுகோள். இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தைக்கு அரசு ஏற்பாடு செய்து நல்ல தீர்வை எட்ட செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் அந்த ஆர்பாட்டத்தில் பேசிய ராதாரவி, ”தயாரிப்பாளர்களிடம் இருந்து பணம் வராமல் இருந்தாலும் கூட, அந்த படம் தியேட்டர்களுக்கு வர துணையாக இருப்பது சம்மேளன தொழிலாளர்கள் தான். இதற்கு போட்டியாக இன்னொரு சம்மேளனம் கொண்டு வருவது அபத்தமானது. எங்கள் தொழிலாளர்கள் இல்லாமல் ஒரு படம் முழுமையாக முடியாது. கதாநாயகன், கதாநாயகியை வைத்து வெறும் அரை மணி நேரம் மட்டும் தான் அவர்கள் படம் எடுக்க முடியும். இப்படி பேசுவதால் எனக்கு எதிர்ப்புகள் வந்தாலும் பரவாயில்லை”, என்றார்.


admin

Related articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *