தன்னை உருவ கேலி செய்தவர்களுக்கு நடிகை நேஹா கொடுத்த பதிலடி

சென்னை,
சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி, தற்போது முன்னணி நடிகையாக ஜொலிக்கிறார், நேஹா. இவர் தற்போது பிரபலமான ‘பாக்கியலட்சுமி’ தொடரில் நடித்து வருகிறார். அதில் வரும் ஒரு நடனக்காட்சியில் நடித்த பிறகு, அவருக்கான கேலி, கிண்டல் அதிகமானது. குறிப்பாக நிறைய உருவ கேலிகளை எதிர்கொண்டார்.
ஆனாலும் கேலி, கிண்டல்களை பொருட்படுத்தாமல் அவர் நடித்துக்கொண்டே இருந்தார். இந்தநிலையில் சமூக வலைதளங்களிலும் அவருக்கு எதிரான கேலி பேச்சுகள் தொடர்ந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேஹா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ‘அய்யய்யோ இவரு மூஞ்சிய பாத்தியா, இவரு மூஞ்சி அப்படியே சோப்பு விளம்பரத்துல வர்ற மாடல் மாதிரியே இருக்காருல. குரங்கு கடிச்ச கொய்யாக்கா மாதிரி ஒரு மூஞ்சி, இவங்க என் மூஞ்ச குறை சொல்றாங்க…’ என்று சந்தானத்தின் காமெடிக்கு நேஹா ‘ரீல்ஸ்’ செய்துள்ளார்.
இதன்மூலம் தனக்கு எதிரான உருவக்கேலி விமர்சனங்களுக்கு நேஹா பதிலடி கொடுத்துள்ளார். நேஹாவின் இந்த பதிவுக்கு திரை பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.