தனுஷ் மற்றும் “இட்லி கடை” படம் குறித்து கோவை பாஷையில் பேசிய சத்யராஜ்

சென்னை,
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. தனுஷே இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
‘இட்லி கடை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி வெளியாக இருக்கிறது. அதற்காக படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 14-ம் தேதி சென்னை நேரு மைதானத்தில் நடைபெற்றது. ‘இட்லி கடை’ படத்தில் நடித்துள்ள கதாபாத்திரங்களின் போஸ்டர்கள் வெளியானது. இன்று கோவையில் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. டிரெய்லர் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சத்யராஜ், கோவை பாஷையில் பேசி அசத்தினார்.
விழாவில் சத்யராஜ் “ நான் ராஜமவுலி இயக்கம் முதல் கொண்டு நடித்து பாத்திட்டனுங்க. இவருகிட்ட நடிப்பது ரொம்ப சிரமமுங்க. இப்படித்தான் நடிக்கனும். இந்த பக்கம்,அந்த பக்கம் நகர முடியாதுங்க. ஆனா ஒன்னும் மட்டும் தெரியுதுங்க. ‘இட்லி கடை’ பட்டைய கௌப்ப போதுங்க. இது கண்டிப்பாக தெரியுதுங்க. சமீப காலத்தில் எத்தனை டிரெய்லர் பாத்திருக்கோம்ங்க. எல்லாம் டமால் டுமில்தான் என இருந்திருக்கும்ங்க. ஒரு டைரக்டர் சிரிக்க வேண்டும்னு காட்சி வச்சா சிரிக்கனும்ங்க. அழுகனும்னு காட்சி வச்சா, அழுகனும்ங்க. எகிறி அடிக்கனும்போது கைதட்டனும்னா தட்டனும்ங்க. அதற்கு பெயர்தான் சினிமா. அதுதான் இட்லி கடைங்க ” என்று பேசினார்.