தனது முதல் பக்தி பாடலை வெளியிட்ட இளையராஜாவின் பேரன்

இந்தியத் திரை இசை வரலாற்றில் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுவிட்ட இளையராஜா ஆயிரம் படங்களைக் கடந்து இன்றும் சினிமா இசையமைப்பாளராக தீவிரமாக இயங்கிவருகிறார். அவருடைய இளைய மகன் யுவன் சங்கர் ராஜாவும் மாபெரும் ரசிகர் படையைக் கொண்ட இசையமைப்பாளராக திகழ்கிறார். இளையராஜாவின் மூத்த மகன் கார்த்திக் ராஜா மேற்கத்திய இசையையும் கர்நாடக இசையையும் முறைப்படி பயின்று, இசையமைப்புப் பணிகளில் இளையராஜாவுக்குத் துணையாகவும் பக்க பலமாகவும் அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து பணியாற்றிவருகிறார்.
இளையராஜா இசையில் வெளியான ‘பாண்டியன்’ படத்தில் ‘பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா’ பாடலுக்கு இசையமைத்தவர் கார்த்திக் ராஜா. அதுவே அவர் இசையமைத்த முதல் பாடல். அதன் பிறகு இளையராஜா இசையமைப்பாளராகப் பணியாற்றிய ‘உழைப்பாளி’, ‘அமைதிப்படை’, ‘சக்கரதேவன்’ உள்ளிட்ட சில படங்களுக்குப் பின்னணி இசை அமைத்தவர் கார்த்திக் ராஜாதான். ‘மாணிக்கம்’ படத்தின் மூலம் முதன்மை இசையமைப்பாளராக அறிமுகமானார் கார்த்திக் ராஜா. அஜித் நடித்த ‘உல்லாசம்’ படம் கார்த்திக் ராஜாவுக்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்தது. சுந்தர்.சி இயக்கிய ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, கமல்ஹாசனின் ‘காதலா காதலா’ ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். ‘டும் டும் டும்’, ‘உள்ளம் கொள்ளை போகுதே’, ‘ஆல்பம்’, ‘குடைக்குள் மழை’, ‘நெறஞ்ச மனசு’, ‘நாளை’, ‘படைவீரன்’ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கும் கார்த்திக் ராஜா இவற்றில் பல வெற்றிப் பாடல்களைக் கொடுத்துள்ளார்.
சினிமாவில் வாய்ப்பு தேடும் இளையராஜாவின் பேரன் யத்தீஸ்வர் ராஜா முதல் பாடலாக பக்திப் பாடல் ஒன்றை இசையமைத்து திருவண்ணாமலையில் இன்று வெளியிட்டுள்ளார்.திருவண்ணாமலையில் அருள்பாலிக்கும் அண்ணாமலையாரை போற்றும் விதமாக ‘நமசிவாயா’ என்ற பாடலை எழுதி இசையமைத்துள்ளார். இந்த பாடலை திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமைந்துள்ள ஸ்ரீ ரமணாஸ்ரமத்தில் யத்தீஸ்வர் ராஜா பாடி வெளியிட்டு உள்ளார். இந்நிகழ்ச்சியில் கார்த்திக் ராஜா, அவரது மனைவி ராஜ்வி, இளைய மகன் ஜெய்தீஸ்வர் ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
.இதுகுறித்து பேசிய யத்தீஸ்வர், “எனக்கும் இசைமேல் ஆர்வம் அதிகம். முதல் பாடல் எப்போதும் கடவுளுக்காக இருக்க வேண்டும் என்பதற்காகப் பக்திப் பாடலை வெளியிட்டேன். இப்பாடலை உருவாக்கும் முன் தாத்தாவிடம் ஆலோசனை கேட்டேன். அவர் எனக்கு சில விஷயங்களைச் சொன்னார். பின், அப்பா பாடலின் வரிகளை கவனித்துக்கொண்டார். சினிமாவில் இசையமைக்க வேண்டும் என்பதே என் ஆசை. நல்ல வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கிறேன்” என தெரிவித்துள்ளார்