‘தனது படங்களை மார்பிங் செய்து வெளியிட்டது தமிழகத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண்’ – நடிகை அனுபமா அறிக்கை | ‘A 20-year-old woman from Tamil Nadu morphed and published her pictures’

‘தனது படங்களை மார்பிங் செய்து வெளியிட்டது தமிழகத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண்’ – நடிகை அனுபமா அறிக்கை | ‘A 20-year-old woman from Tamil Nadu morphed and published her pictures’



சென்னை,

தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் நடித்து வரும் நடிகை அனுபமா பரமேஸ்வரன், கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தனுஷின் ‘கொடி’ படம் மூலம் தமிழ் திரையுலகில் கால்பதித்தார். சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான ‘பைசன்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், நடிகை அனுபமா பரமேஸ்வரன் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு தொடங்கப்பட்டு, அதில் அவரது புகைப்படங்களை மார்பிங் செய்து சிலர் பதிவிட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இந்த விவகாரத்தில் குற்றவாளி யார் என்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அது தமிழ்நாட்டை சேர்ந்த 20 வயது பெண் எனவும் அனுபமா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“சில நாட்களுக்கு முன்பு, ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னை பற்றியும், என் குடும்பத்தினரை பற்றியும், என் நண்பர்கள் மற்றும் சக நடிகர்களை பற்றியும் மிகவும் பொருத்தமற்ற, தவறான பதிவுகள் வெளியிடப்பட்டு வருவதாக எனக்கு தெரியவந்தது. அந்த பதிவுகளில் எனது மார்பிங் செய்யப்பட்ட படங்கள் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இருந்தன. இதுபோன்ற துன்புறுத்தல்களை ஆன்லைனில் பார்ப்பது மிகவும் வருத்தமாக இருந்தது.

மேலும் விசாரணையில், வெறுப்பைப் பரப்பும் ஒரே நோக்கத்துடன் அதே நபர் பல போலி கணக்குகளை உருவாக்கியிருப்பது தெரியவந்தது. இது குறித்து அறிந்ததும், நான் உடனடியாக கேரளாவில் உள்ள சைபர் கிரைம் காவல்துறையிடம் புகார் அளித்தேன். அவர்கள் உடனடியாகவும், திறமையாகவும் நடவடிக்கை எடுத்தனர். மேலும் அவர்களின் உதவியுடன், இந்த செயலுக்குப் பின்னால் உள்ள நபர் அடையாளம் காணப்பட்டார்.

அவர் தமிழ்நாட்டை சேர்ந்த 20 வயது இளம்பெண் என்ற தகவல் எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. அவருடைய இளம் வயதை கருத்தில் கொண்டு, அவருடைய எதிர்காலத்திற்கும், மன அமைதிக்கும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால், அந்த பெண்ணின் அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று நான் முடிவு செய்துள்ளேன்.

இருப்பினும், ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துவதற்காக இந்த சம்பவத்தை பகிர்ந்து கொள்கிறேன். ஸ்மார்ட்போன் வைத்திருப்பது அல்லது சமூக ஊடக தளங்களை அணுகுவதன் மூலம் யாரையும் துன்புறுத்தவோ, அவதூறு செய்யவோ அல்லது மற்றவர்களுக்கு எதிராக வெறுப்பைப் பரப்பவோ யாருக்கும் உரிமை கிடையாது. ஆன்லைனில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு தடயத்தை விட்டுச்செல்கிறது. எனவே அதற்கு நாம் பொறுப்பேற்க வேண்டும்.

நாங்கள் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். அந்த பெண் தனது செயல்களின் விளைவுகளை எதிர்கொள்வார். ஒரு நடிகராகவோ அல்லது பொது நபராகவோ இருப்பது அடிப்படை உரிமைகளைப் பறித்துவிடாது. ஆன்லைனில் அவதூறு செய்வது தண்டனைக்குரிய குற்றம். அதற்கு நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *