"தகாத தொடுதலை, அத்துமீறல்களை அனுபவித்தேன்" – பாலிவுட் நடிகை டயானா பென்டி

மும்பை,
“காக்டெயில், சல்யூட், செல்பி, அசாத், சாவா” போன்ற பல படங்களில் நடித்தவர், பிரபல பாலிவுட் நடிகை டயானா பென்டி. இளமை துள்ளலான இவரது நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதேபோல மனதில் பட்டதை பேசி, பின்னர் வம்பில் மாட்டிக்கொள்ளும் பிரபலங்களில் இவரும் ஒருவர்.
இந்நிலையில், நடிகை டயானா பென்டி தனது வாழ்வில் நடந்த கசப்பான சம்பவங்களை நினைவுகூர்ந்து வேதனை தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, ”மும்பையில் வசிக்கும் ஒவ்வொரு பெண்ணும் பல கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டிருப்பார்கள். இது நிதர்சனமான உண்மை. நான் கல்லூரிக்கு செல்லும்போது மின்சார ரெயிலில் தான் பயணித்து வந்தேன். அந்த பயணத்தில் முழங்கைகளால் என் உடலில் அழுத்துவார்கள். என்னை கேலி செய்து திட்டி பேசுவார்கள். இது அன்றாடம் நடக்கும் நிகழ்வாகவே மாறிவிட்டது.
இவர்களை போன்ற கயவர்களை திருப்பி அடிக்கும் தன்னம்பிக்கை எனக்கு அப்போது இல்லை. அந்தவகையில் பஸ்களில், ரெயில்களில் பயணிக்கும்போது தகாத தொடுதலை, அத்துமீறல்களை அனுபவித்தேன், தவித்து போனேன்”, என்று தெரிவித்துள்ளார்.