டெல்லியில் இன்று நடக்கும் 71வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா

புது டெல்லி,
இந்தியாவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகளுக்கு 1954-ம் ஆண்டு முதல் ‘தேசிய விருதுகள்’ வழங்கப்பட்டு வருகிறது. சிறந்த திரைப்பட இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை போன்ற பல துறைகளுக்கும் தேசிய விருதுகள் வழங்கப்படுகின்றன.
அந்த வகையில் 2023-ம் ஆண்டிற்கான 71-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா, இன்று மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விருதுகளை வழங்க உள்ளார்.
தேசிய திரைப்பட விருது விழாவில், பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. மேலும், சிறந்த தமிழ் படம் மற்றும் சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதுகளை ‘பார்க்கிங்’ படம் பெறுகிறது. அப்படத்தில் நடித்த எம்.எஸ்.பாஸ்கர் சிறந்த துணை நடிகருக்கான விருதையும் பெறுகிறார். ‘வாத்தி’ படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை ஜி.வி.பிரகாஷ் பெறுகிறார்.
மேலும், நடிகை ஊர்வசிக்கு சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருது, சுதீப்தோ சென்னுக்கு சிறந்த திரைப்பட இயக்குனராக விருது என பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த விருதுகள் வழங்கப்பட உள்ளன.