"டி.என்.ஏ" சினிமா விமர்சனம்

"டி.என்.ஏ"  சினிமா விமர்சனம்


காதல் தோல்வியால் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகும் அதர்வா, குடும்பத்தாரின் பகையை சம்பாதிக்கிறார். இன்னொரு புறம் மனநலன் பாதிப்பு கொண்ட நிமிஷா சஜயனுக்கு திருமணம் ஆகாததால், அவரது குடும்பத்தினர் மனஉளைச்சல் கொள்கிறார்கள். சமுதாயத்தால் புறக்கணிக்கப்படும் இருவரும், ஒருகட்டத்தில் திருமணத்தில் இணைகிறார்கள். ஆனந்தமாய் வாழ்க்கை நகர குழந்தையும் பிறக்கிறது. பிரசவம் முடிந்து, குழந்தையை கையில் ஏந்தும் நிமிஷா சஜயன், ‘இது என்னுடைய குழந்தை அல்ல’ என்று கூற அதிர்ச்சி பிறக்கிறது. இதற்கு பின்னணியில் குழந்தை கடத்தல் நடந்தது வெளிச்சத்துக்கு வருகிறது.

அதர்வா – நிமிஷா சஜயன் தம்பதிக்கு பிறந்த குழந்தை என்ன ஆனது? அவர்கள் கையில் இருக்கும் குழந்தை யாருடையது? இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன? என்பதே பரபரப்பான மீதி கதை. 

அதர்வா, உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அழுகை, சோகம், சந்தோஷம், விரக்தி, அதிரடி என எல்லா பரிமாணங்களிலும் ‘ஸ்கோர்’ செய்துள்ளார். குழந்தை திருட்டை கண்டுபிடிக்கும் இடம் ‘திரில்’.

அதர்வாவுக்கு இணையாக போட்டிபோட்டு நடித்து மிரட்டியுள்ளார், நிமிஷா சஜயன். உரியவரிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டு அழும்போதும், குப்பை தொட்டியில் குழந்தையை தேடும்போதும் அனுதாபம் அள்ளுகிறார். 

போலீஸ்காரராக வரும் பாலாஜி சக்திவேல் மனதில் பதிகிறார். ரமேஷ் திலக், ரித்விகா, சேத்தன், விஜி சந்திரசேகர், போஸ் வெங்கட் என அனைவரது நடிப்பிலும் எதார்த்தம் தெரிகிறது.

பார்த்திபன் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. சத்யபிரகாஷ், ஸ்ரீகாந்த் ஹரிஹரன், பிரவீன் சாய்வி, சாஹி சிவா, அனல் ஆகாஷ் ஆகியோரின் இசையும், ஜிப்ரானின் பின்னணி இசையும் நிறைவு.

விறுவிறுப்பான திரைக்கதை பலம். அதர்வாவின் ‘பிளாஷ்பேக்’ காதல், காயத்ரி சங்கரின் கவர்ச்சி ஆட்டம் தேவையா?

குழந்தை கடத்தல் பற்றிய அபாயங்களை எடுத்துச்சொல்லி, புதிதாக திருமணமானவர்களுக்கும், குழந்தை பெற்றவர்களுக்கும் விழிப்புணர்வு தரும் வகையில் படத்தை இயக்கி கவனம் ஈர்த்துள்ளார், நெல்சன் வெங்கடேசன்.

டி.என்.ஏ. – திருப்புமுனை

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *