டிக்கெட் முன்பதிவில் ரூ. 58 கோடி வசூலித்த மோகன்லாலின் "எம்புரான்"

டிக்கெட் முன்பதிவில் ரூ. 58 கோடி வசூலித்த  மோகன்லாலின் "எம்புரான்"


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன்லால். இவர் நடிப்பில், மலையாள நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘லூசிபர்’. இந்த படத்தின் மூலம் பிருத்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். தற்போது, இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி இருக்கிறது. இந்த படத்திற்கு ‘எல் 2 எம்புரான்’ என பெயரிடப்பட்டுள்ளது. இதில், மோகன்லால், பிருத்விராஜ், மஞ்சுவாரியர், டோவினோ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் டோவினோ தாமஸ் ‘ஜதின் ராமதாஸ்’ என்ற கதாபாத்திரத்திலும், பிருத்விராஜ் ‘சையத் மசூத்’ என்ற கதாபாத்திரத்திலும், மோகன்லால் ‘குரேஷி ஆபிராம் ஏ.கே. ஸ்டீபன் நெடும்பள்ளி’ என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. கேம் ஆப் த்ரோன்ஸ் மூலம் உலகப் புகழ் பெற்ற ஜெரோம் பிளின் இப்படத்தில் நடித்திருப்பது படத்திற்கு சர்வதேச அங்கீகாரத்தை அளித்துள்ளது.

மோகன்லால் படத்திலேயே மிக அதிக பட்ஜெட் படமாக இப்படம் உருவாகியுள்ளது.முன்பதிவு தொடங்கிய தொடங்கிய நிலையில் திரிசூரில் அவரது ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு சென்ற விடியோ இணையத்தில் பேசுபொருளாகியது. ஆரம்பமான ஒரு மணி நேரத்திற்குள்ளாக 96 ஆயிரம் டிக்கெட்டுகள் ஒரே ஒரு ஆன்லைன் இணையதளத்தில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் இந்தியத் திரைப்படங்களில் இப்படியான ஒரு மணி நேர முன்பதிவில் ‘லியோ’ படம் 82 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதுதான் சாதனையாக இருந்தது. அதை தற்போது ‘எல் 2 எம்புரான்’ படம் முறியடித்துள்ளது. மேலும் 24 மணிநேரத்தில் அதிக டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த முதல் இந்தியத் திரைப்படமாக எம்புரான் சாதனை படைத்துள்ளது. முதல் நாளில் 6 லட்சத்து 45 ஆயிரம் டிக்கெட்கள் முன்பதிவானது.

இந்த நிலையில், படக்குழுவினர் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது, இயக்குநர் பிருத்விராஜிடம், “எம்புரான் திரைப்படத்திற்கான ஆன்லைன் முன்பதிவில் இதுவரை 6.5 லட்சம் டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளன. இது, பாலிவுட்டில்கூட நடந்ததில்லை. எப்படி உணர்கிறீர்கள்?” எனக் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பிருத்விராஜ், “லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இப்படத்திற்கு வரவேற்பு இருக்கும் எனத் தெரியும். ஆனால், இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. டிக்கெட் முன்பதிலேயே உலகளவில் ரூ. 58 கோடி வரை எம்புரான் வசூலித்துவிட்டதாக என் தயாரிப்பாளர் அழைத்துச் சொன்னார். இப்படம் இன்னும் நிறைய ஆச்சரியங்களைச் செய்யும் என நினைக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *