டால்பி தொழில்நுட்பத்தில் வெளியாகும் “பாகுபலி: தி எபிக்”.. உற்சாகத்தில் ரசிகர்கள்

எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியான படம் ‘பாகுபலி’. இதில் அனுஷ்கா, ரம்யாகிருஷ்ணன்,ராணா டகுபதி, நாசர், சத்யராஜ் மற்றும் பலர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்று ரூ.1800 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
அதனை தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு பாகுபலி 2 வெளியாகி அதுவும் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்தது.
இந்த நிலையில் இப்படத்தின் முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ‘பாகுபாலி’ படத்தை ரி-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அதாவது, பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் தனித்தனியாக ரீரிலீஸ் செய்யாமல் இரண்டையும் இணைத்து ஒரே படமாக “பாகுபலி தி எபிக்” என்ற பெயரில் வருகிற அக்டோபர் மாதம் 31ந் தேதி திரையரங்குளில் வெளியிட உள்ளனர்.
இப்படத்தை ரசிகர்களுக்கு கூடுதல் கொண்டாட்டம் மற்றும் திரை அனுபவத்தை தருவதற்காக படத்தை படக்குழு ஐ மேக்ஸ் தொழில் நுட்பத்தில் வெளியிடுகின்றனர். மேலும், பாகுபலி: தி எபிக் திரைப்படம் டால்பி சினிமாவில் டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகவுள்ளது என்று படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.