“ஜெயிலர் 2” படம் குறித்து “பில்டப்” செய்ய விரும்பவில்லை – இயக்குனர் நெல்சன்

சென்னை,
இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2023ம் ஆண்டு ‘ஜெயிலர்’ திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் ரூ. 600 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமான ‘ஜெயிலர் 2’ படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். முதல் பாகத்தை போல ‘ஜெயிலர் 2’ படத்திலும் மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் கேமியோ ரோலில் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
‘ஜெயிலர்’ படத்தில் மலையாள நடிகர் விநாயகன் வில்லனாக நடித்த நிலையில், தற்போது இந்த ‘ஜெயிலர் 2’ படத்தில் இன்னொரு மலையாள நடிகரான சுராஜ் வெஞ்சாரமூடு நடித்து வருகிறார். இரண்டாம் பாகத்தின் கதைக்களம் கேரளாவை மையப்படுத்தியது என்று கூறப்படுகிறது. அதனால்தான் படப்பிடிப்பு பணிகள் கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த படம் அடுத்தாண்டு கோடை கொண்டாட்டமாக திரைக்கு வருகிறது.
‘ஜெயிலர் 2’படத்தின் ‘அப்டேட்’ கேட்டு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வந்த நிலையில், படத்தின் இயக்குனர் நெல்சன் சில தகவல்களை பேசியுள்ளார். ‘ஜெயிலர்-2′ படம் குறித்து ஓவராக பேசி ‘பில்டப்’ ஏற்ற விரும்பவில்லை. அந்த படம் நல்லபடியாக வெளியாகட்டும். எல்லாவற்றையும் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம். ஏனெனில் சிறிய விஷயங்களை ஏற்காவிட்டால் கூட படங்களை விமர்சிக்க தொடங்கிவிடுவார்கள். எனவே பார்த்துக் கொள்ளலாம், என்கிறார் நெல்சன்.