ஜி.வி.பிரகாஷ் பிறந்தநாள்: "இம்மோர்டல்" படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

சென்னை,
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவரது நடிப்பில் சமீபத்தில் ‘கிங்ஸ்டன்’ படம் வெளியானது. கமல் பிரகாஷ் எழுதி இயக்கிய இப்படத்தில் திவ்யபாரதி கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதனை தொடர்ந்து ‘இடிமுழக்கம்’ என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அறிமுக இயக்குனர் மாரியப்பன் சின்னா இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக கயாடு லோஹர் நடிக்கிறார். ஏகே பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்க உள்ள இப்படத்திற்கு ‘இம்மோர்டல்’ எனப்பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார்.
இந்நிலையில், மாரியப்பன் சின்னா புதிய போஸ்டரை பகிர்ந்து “திறமையின் ஆற்றல் நிலையமான ஜி.வி.பிரகாஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். மறக்க முடியாத இசைத்துணுக்குகளும் குறிப்பிடத்தக்க நடிப்பும் காத்திருக்கின்றன. ‘இம்மோர்டல்’ படக்குழு சார்பாக வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.